திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.29 சதவீதம் பேர் தேர்ச்சி


திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.29 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

திருச்சி,

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடந்தது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையிலும் தேர்வு முடிவுகளை தலைமை ஆசிரியர்கள் ஒட்டினர். மாணவ-மாணவிகள் அதனை ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களது தேர்ச்சி விவரத்தை அறிந்து கொண்டனர். இதேபோல செல்போன்களில் இணையதள முகவரியை பயன்படுத்தியும் தங்களது மதிப்பெண் விவரத்தை அறிந்து கொண்டனர்.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மதிப்பெண்கள் பட்டியல் விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. மதிப்பெண்கள் தெரிந்த மகிழ்ச்சியில் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 81 மாணவர்களும், 18 ஆயிரத்து 281 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 362 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதினர்.

இதில் 17 ஆயிரத்து 49 மாணவர்களும், 17 ஆயிரத்து 963 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 12 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 96.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.98 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டுடன் (2017) இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை ஒப்பிடும் போது 0.69 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வருகிற கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கல்வி அதிகாரிகள் சுந்தரபாண்டியன் (திருச்சி), அறிவழகன் (லால்குடி), குயின் எலிசபெத் (முசிறி) ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story