அஞ்சல் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


அஞ்சல் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 24 May 2018 4:00 AM IST (Updated: 24 May 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் அஞ்சல் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கோரியும், சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வலியுறுத்தியும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி 2-வது நாளாக நேற்று அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் நாகை கோட்டம் சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சலக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு கோட்ட செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். அப்போது, அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கோரியும், சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வலியுறுத்தியும் தபால் நிலைய வளாகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் சங்கத்தை சேர்ந்த மணிமாறன், மலர் வண்ணன், தியாகராஜன், மாரிமுத்து, கோட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சங்கத்தை சேர்ந்த மோகன், ராஜ், கண்ணன், பிச்சுமணி, சட்டநாதன், இளங்கோவன், வில்லியம்சன், குமரவேலு, நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கிராமிய அஞ்சல் ஊழியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

பணிகள் முடக்கம்

இதனால் நேற்று தபால் நிலையத்தில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் நேற்று பல்வேறு பணிகளுக்காக தபால் நிலையம் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் முன்பு உள்ள ஏ.டி.எம். மையமும் மூடப்பட்டது. அதேபோல் நாகை, காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு தலைமை தபால் நிலையம், 29 துணை தபால் நிலையம், 86 கிளை தபால் நிலையங்களை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில், அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று சங்கத்தின் சார்பில் 2-வது நாளாக மயிலாடுதுறை தலைமை தபால் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எம்.எஸ். சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் சாமி.கணேசன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர்கள் மோகன்குமார், அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட தலைவர் ஊமைதுரை வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கிராமபுற அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவில் கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. முடிவில் கோட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார். 

Next Story