ஸ்டெர்லைட் விவகாரம்: உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பொள்ளாச்சி
பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நேற்று நடந்தது. இதில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ், மூத்த தலைவர் இல.கணேசன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற தமிழக பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 11 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிர் இழந்தவர்களுக்கு செயற்குழு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளோம். போராட்டத்தை காவல்துறை முறைப்படுத்தி இருந்தால் உயிர் இழப்பு தடுக்கப் பட்டு இருக்கும். போராட்டம் குறித்து முன்கூட்டியே முழுமையாக கணிக்க தவறிய உளவுத் துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது.
துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம், அரசு வேலை வாய்ப்பை உடனடியாக வழங்க வேண்டும். இந்த போராட்டத்தை தூண்டி பிழைப்பு நடத்தும் அமைப்புகள், இயக்கங்களை அரசு கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
வைகோ, மு.க.ஸ்டாலின் ஆகியோர் எரிகின்ற இந்த பிரச்சினையில் எண்ணெய் ஊற்றக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு சட்டரீதியாகவும், பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காணலாம். போராட்டம் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது.
தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை நேரில் சென்று ஆராய நான், மாநிலதுணை தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சி நிர்வாகிகள் ராஜகண்ணன், கனகராஜ், பாலாஜி, தர்மராஜ், ராஜலட்சுமி உள்ளிட்ட குழுவினர் நாளை (இன்று) செல்கிறோம். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் அரசு பதவி ஏற்பதை கர்நாடக பா.ஜனதா கட்சி கருப்பு தினமாக கடைபிடிக்கிறது. விரைவில் இந்த கூட்டணி அரசை மக்கள் நிராகரிப்பார்கள் . இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story