தென்னை மரத்தில் இருந்து நீராபானம், மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்


தென்னை மரத்தில் இருந்து நீராபானம், மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 May 2018 4:00 AM IST (Updated: 24 May 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

தென்னை மரத்தில் இருந்து நீராபானம், மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக வேலூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளனார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீராபானம் என்பது தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் சுவை மிக்க ஊட்டச்சத்து பானம். தென்னை மரத்தின் பாளையில் இருந்து எடுக்கப்படும் இந்தப் பானம் மது வகையை சார்ந்ததல்ல. நீரா பானத்தில் அதிக அளவில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளன. தென்னம்பாளைகளில் இருந்து எடுக்கப்பட்டதும் அவை வடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு பின்னர் குளிர்பதன முறையில் சேமிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தென்னம் பாளைகளில் சுரக்கும் இந்தப் பானத்தைக் காய்ச்சி அதில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களான கருப்பட்டி, கற்கண்டு, சர்க்கரை, சாக்லேட் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களையும் தயார் செய்து கூடுதல் லாபம் பெறலாம். நீரா பானத்தில் சர்க்கரை அளவினை உயர்த்தும் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் விரும்பி அருந்தக்கூடிய பானம் ஆகும்.

தமிழக அரசின் ஆணையின்படி, நீராபானம் உற்பத்தி செய்ய, தென்னை வளர்ச்சி வாரியம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கம்பெனி பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தச் சட்டத்தின்படி பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் உரிமம் பெறுவதற்கு உரிமக் கட்டணம் ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எனவே உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சங்கங்கள், வேளாண்மைத் துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) அணுகி முழு விவரங்களைக் கேட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story