எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 88.84 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி, வேலூர் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 88.84 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
வேலூர்,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பள்ளிக்கு சென்றும், ஆன்லைனிலும், செல்போனிலும் பார்த்து தெரிந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 199 மாணவர்களும், 25 ஆயிரத்து 539 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 738 மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினர்.
அதில், 21 ஆயிரத்து 447 மாணவர்களும், 23 ஆயிரத்து 631 மாணவிகளும் என மொத்தம் 45 ஆயிரத்து 78 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 85.11 சதவீதமும், மாணவிகள் 92.53 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மொத்த தேர்ச்சி 88.84 சதவீதமாகும். வேலூர் மாவட்டம் ஒரு இடம் பின்தங்கி மாவட்ட அளவில் கடைசி இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் 31-வது இடத்தை பிடித்திருந்தது.
கடந்த ஆண்டு 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 0.7 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய 867 மாணவ - மாணவிகளில் 706 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்வு எழுதிய 31 மாணவர்களில் 29 பேரும், வனத்துறை பள்ளிகளில் 168 மாணவர்களில் 155 பேரும், அரசு நிதியுதவி பள்ளிகளில் தேர்வு எழுதிய 8,822 மாணவர்களில் 7,707 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 25 ஆயிரத்து 709 மாணவர்களில் 21,915 பேரும், நகராட்சி பள்ளிகளில் தேர்வு எழுதிய 768 மாணவர்களில் 612 பேரும், ஓரியன்டல் பள்ளிகளில் தேர்வு எழுதிய 85 மாணவர்களும், பகுதி நிதியுதவி பள்ளிகளில் தேர்வு எழுதிய 3,140 மாணவர்களில் 2,928 பேரும், ரெயில்வே பள்ளிகளில் தேர்வு எழுதிய 19 மாணவர்களும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் தேர்வு எழுதிய 10,756 மாணவர்களில் 10,586 பேரும், மாநில பாடத்திட்ட சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய 373 மாணவர்களில் 336 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story