துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி: பா.ஜ.க. தூண்டுதலின் பேரில் நடந்த சம்பவம், தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள். இது பா.ஜ.க. தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது. என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 22). விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர். கடந்த 1-ந் தேதி அரவிந்தன் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அக்கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில், அவரது படத்திறப்பு மற்றும் நிதி உதவி வழங்கும் விழா திருப்பத்தூரில் நடந்தது.
விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மு.வெற்றிகொண்டான், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர் என்கிற பகலவன், ரமேஷ், சக்தி, அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், தங்கமணி, சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஆனந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு, அரவிந்தன் படத்தை திறந்து வைத்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரவிந்தன் கொலை செய்யப்பட்டது மிக கொடூரமான செயல். கண்டனத்திற்கு உரியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரவிந்தனுக்கு வீர வணக்கம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கடந்த 3 மாதமாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதில் 10 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
இந்த துப்பாக்கி சூட்டை அரசு திட்டமிட்டு செய்து உள்ளது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை போலீசார் சுட்டு கொன்று இருக்கிறார்கள். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும்.
ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் கூடிய கூட்டம் போன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திரண்டு இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு வெற்றி பெற்றதை போன்று இதுவும் வெற்றி பெற்றால், பின்னர் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஊர் ஊராக மக்கள் திரள்வார்கள் என ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இந்த படுகொலையை செய்து இருக்கிறார்கள்.
பா.ஜ.க. தூண்டுதலின்பேரில் தமிழக ஆட்சியாளர்கள் செய்த வேலை இது. வருங்காலங்களில் பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் ஒன்றுகூடி தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் கலா சண்முகம் நன்றி கூறினார்.
அதைத் தொடர்ந்து கவுதமபேட்டையில் உள்ள புத்தர் கோவிலுக்கு திருமாவளவன் சென்று வழிபட்டார். பின்னர் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 14 இடங்களில் கட்சி கொடியேற்றினார்.
Related Tags :
Next Story