நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.
ஊட்டி
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 102 மாணவர்களும், குன்னூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 123 மாணவர்களும் என மொத்தம் 8 ஆயிரத்து 225 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்கள் சேர்க்கையின் போது பள்ளிகளில் அளித்த செல்போன் எண்களுக்கு மதிப்பெண் விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டன.
தேர்வு முடிவுகள் வெளிவந்த உடனேயே மாணவர்கள் தங்களது செல்போன்களில் மதிப்பெண்களை ஆர்வமுடன் பார்த்து பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் அந்த குறுஞ்செய்தியை தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பி வைக்கப்பட்டதால், பள்ளி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகை தரவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் கூட்டமின்றி வெறிசோடி காணப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர்.
ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அங்கு படிக்கும் மாணவிகளின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம் ஒட்டப்பட்டு இருந்தது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மாணவிகள் பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்து தெரிந்துகொண்டனர். மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மேலும் செல்போன்களில் வந்த குறுஞ்செய்தியில் தேர்வு மதிப்பெண்களை பார்த்து தெரிந்துகொண்டனர்.
நீலகிரியில் கூடலூர் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 846 பேரும், குன்னூர் கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 984 பேரும் என மொத்தம் 7 ஆயிரத்து 830 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 738 மாணவர்கள், 4 ஆயிரத்து 92 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கூடலூர் கல்வி மாவட்டம் 91.75 சதவீத தேர்ச்சியும், குன்னூர் கல்வி மாவட்டம் 97.29 சதவீத தேர்ச்சியும் பெற்று உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நீலகிரி மாவட்டம் 95.09 சதவீத தேர்ச்சி பெற்று இருந்தது. இந்த ஆண்டு 0.11 தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் 95.20 சதவீத தேர்ச்சி பெற்று நீலகிரி மாவட்டம் 18-வது இடத்தை பிடித்து உள்ளது.
Related Tags :
Next Story