மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.08 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட ஒரு சதவீதம் அதிகம் ஆகும்.

சேலம்,

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடந்தது. இதையொட்டி நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 527 பள்ளிகளை சேர்ந்த 44 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 42 ஆயிரத்து 462 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளையும், தேர்ச்சி சதவீதம் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் வெளியிட்டார். அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி பெற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆர்.மதன்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கென்னடி ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்வு முடிவுகள் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 343 மாணவர்களில் 20 ஆயிரத்து 966 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.84 சதவீதம் ஆகும். மாணவிகளில் 22 ஆயிரத்து 317 பேர் தேர்வு எழுதியதில் 21 ஆயிரத்து 496 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.32 சதவீதம் ஆகும். மொத்தம் 44 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 42 ஆயிரத்து 462 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 95.08 ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிவிலும் 1.01 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு (2017) 46,993 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 44,206 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.07 சதவீதம் ஆகும். ஆனால் இந்தாண்டு 95.08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதால் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 20 பேர் தேர்வு எழுதியதில் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல், வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் 34 பேர் தேர்வு எழுதினர். இதில் 20 பேர் தேர்ச்சி பெற்றனர். எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் வருகிற 28-ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்களது பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம். இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் மறுக்கூட்டலுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்த 32 மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டம் ‘ரேங்க்‘ பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டம் ‘ரேங்க்‘ பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவில் 21-வது இடத்தில் இருந்த சேலம் மாவட்டம் இந்த ஆண்டு முன்னேற்றம் அடைந்து 18-வது இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிக்கு காலையில் ஆர்வமுடன் வந்து காத்திருந்தனர். சரியாக 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் அவர்களது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. சில மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களை பள்ளிக்கு எடுத்து வந்து தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை பார்த்தனர். 

Next Story