பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை: அரசு பணியாளர்கள் கூட்டமைப்பினர் போராட்டம்
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு பணியாளர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
பொதுப்பணித்துறையில் கடந்த 2010-ம் ஆண்டு வவுச்சர் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட 1,311 ஊழியர்களுக்கு 16 நாட்கள் பணியும் ரூ.3,200 சம்பளமும் வழங்கப்படுகிறது. அவர்கள் வேலைநாட்களை 30 ஆக உயர்த்த வேண்டும், குறைந்தபட்ச கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.398 வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும் அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி போராடி வருகிறார்கள்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் நேற்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் குமாரராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த மாத இறுதிக்குள் முழுநேர தினக்கூலி ஊழியர்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story