ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் பணிநீக்கம்


ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் பணிநீக்கம்
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரி, 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எம்.திருக்கனூரை சேர்ந்தவர் பரமசிவம், தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி விதையை அரைத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் லட்சுமி கடந்த 16-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. அப்போது அங்குள்ள ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் ரூ.1500 லஞ்சம் வேண்டும் என்று கேட்டு லட்சுமியின் உறவினர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அவர்கள் சவக்கிடங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.1500 லஞ்சமாக கொடுத்தனர். அதன் பின்னரே லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் லட்சுமியின் உறவினர்களிடம் சவக்கிடங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முகமூடி அணிந்தபடி பணத்தை பெற்றுச்செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஜிப்மர் நிர்வாகத்திடம் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜிப்மர் நிர்வாக தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது லஞ்சம் வாங்கிய ஊழியர் வேல்முருகன் என்பது தெரியவந்தது. அவர் ஏற்கனவே பணி ஓய்வு பெற்றவர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து வேல்முருகனை பணிநீக்கம் செய்து ஜிப்மர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story