தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையில் நாளை ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு


தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையில் நாளை ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 24 May 2018 12:00 AM GMT (Updated: 23 May 2018 10:07 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து புதுவையில் அனைத்து கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று புதுவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி அபிஷேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள், தமிழ் மாநில குழு உறுப்பினர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், மனித நேய மக்கள் கட்சி அமைப்பாளர் பஷீர் அகமது, திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, ம.தி.மு.க. மாநில தலைவர் கபிரியேல், பா.ம.க. நிர்வாகி தங்கம், இந்திய குடியரசு கட்சி நிர்வாகி ரத்தினவேல், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், பொருளாளர் சண்.குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது.

*ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசினையும் இந்தக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

*தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) புதுவை சுதேசி மில் அருகே காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

*துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

Next Story