தூத்துக்குடியில் அமைதி திரும்ப தீவிர நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரிகள் பேட்டி
தூத்துக்குடியில் அமைதி திரும்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கண்காணிப்பு அதிகாரிகள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கூறினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அமைதி திரும்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கண்காணிப்பு அதிகாரிகள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கூறினர்.
கண்காணிப்பு அலுவலர்கள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை கண்காணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் கண்காணிப்பு அதிகாரிகளாக டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடிக்கு வந்த அவர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கலவரத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து பேசினர்.
மீண்டும் ஆறுதல்
நேற்று காலை 11.30 மணி அளவில் கண்காணிப்பு அதிகாரிகள் டேவிதார், ககன்தீப்சிங் ஆகியோர் மீண்டும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் கலவரத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து பேசினர். அப்போது காயம் அடைந்த ஒருவரது உறவுக்கார பெண், அதிகாரிகளிடம் நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் உணவு, பால் கிடைக்கவில்லை என்று முறையிட்டார். உடனே டாக்டர்களை அழைத்த அதிகாரிகள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் உணவு, பால் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
பேட்டி
அதன்பிறகு ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்த கண்காணிப்பு அதிகாரிகள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தூத்துக்குடி நகர்ப்பகுதியை நாங்கள் பார்வையிட்டோம். ஆங்காங்கே ஒருசில டீக்கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறந்துள்ளன. தூத்துக்குடி நகரில் விரைவில் அமைதி திரும்பும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தீவிரமாக எடுத்து வருகிறோம். இதற்காக வியாபாரிகள், வணிக நிறுவன உரிமையாளர்களை சந்தித்து பேச இருக்கிறோம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடன் இருப்பவர்கள் சிரமப்படாமல் இருப்பதற்கு தேவையான உதவிகள் செய்யவும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story