ஹிப் ஹாப் ஆசிரியர்
குர்த் மின்னார் என்ற 33 வயது ஆசிரியர், ஹிப் ஹாப் இசையில் நடனத்தோடு கணிதப் பாடங்களைச் சொல்லித் தருகிறார்!
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள இபன் டாங்கஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கணித வகுப்புகள் என்றால் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்! ஏனெனில் குர்த் மின்னார் என்ற 33 வயது ஆசிரியர், ஹிப் ஹாப் இசையில் நடனத்தோடு கணிதப் பாடங்களைச் சொல்லித் தருகிறார்! அதனால் கணிதம் என்றாலே பயந்து ஓடியவர்கள் இன்று கணித வகுப்புகளுக்காகவே விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகிறார்கள்!
‘‘நான் ஆரம்பத்தில் நடனக் கலைஞராக இருந்தவன். பிறகுதான் ஆசிரியர் பணிக்கு வந்தேன். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி கற்கும் திறன் இருக்காது. சிலருக்கு எளிதில் புரியும். சிலருக்கு அதிகக் காலம் தேவைப்படும். ஆனால் எல்லா மாணவர்களும் நடனத்தையும் இசையையும் ஒரே மாதிரி விரும்புகிறார்கள். அதனால் கணிதத்தை இசையும் நடனமும் கலந்து சொல்லிக் கொடுக்க முடிவெடுத்தேன். நான் நினைத்ததை விட மிக அதிகமாகவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மேஜையில் ஏறி நின்று, பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கணிதத்தைக் கற்றுக் கொடுத்துவருகிறேன். சாதாரணமாகச் சொல்லிக் கொடுப்பதை விட இந்த முறையில் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் கவனம் இதிலேயே குவிக்கப்படுகிறது. வகுப்பை விட்டுச் சென்றாலும் மீண்டும் மீண்டும் இசை மூலம் கணிதம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் அவர்களும் பாடி, ஆடியபடியே கணிதத்தைச் செய்து பார்க்கும்போது மறந்து போவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. மாணவர்களின் கற்கும் திறன் மிக நல்ல முறையில் அதிகரித்திருக்கிறது என்பதை அவர்களின் தேர்வு முடிவுகள் காட்டிவிட்டன. கற்பிப்பதில் இன்னும் பல புதுமை களைப் புகுத்த இருக்கிறேன்’’ என்கிறார் குர்த் மின்னார்.
Related Tags :
Next Story