வினோத காலநிலைகள்!


வினோத காலநிலைகள்!
x
தினத்தந்தி 1 Jun 2018 4:00 AM IST (Updated: 30 May 2018 2:52 PM IST)
t-max-icont-min-icon

மழை, வெயில், புயல், வெள்ளம், பஞ்சம் என பல காலநிலைகள் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வெயில் கொளுத்துகிறது. மனம் நிழலில் இளைப்பாற விரும்புகிறது. மழைக்கு ஏங்கித் தவிக்கிறது. ஆனால் இதே பூமியில் இன்னொரு பக்கம் குளிர்காலமாக உள்ளது. அவர்கள் வெயில் முகம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பூமியில் இப்படி மழை, வெயில், புயல், வெள்ளம், பஞ்சம் என பல காலநிலைகள் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிக்கடி மாறும் காலநிலைகளே உயிரினங்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கிறது. பஞ்சம், கடும்குளிர் போன்ற சில கொடுமையான காலநிலைகள் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்துள்ளது. பூமியின் வினோத காலநிலை, தட்பவெட்பம் பற்றிய சில சுவாரசிய சங்கதிகளை இங்கே தெரிந்து கொள்வோம்...

 உலகின் அதிகமான வெப்பநிலை என்றால் அண்டார்டிகாவில் 14.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதுதான். 1974 -ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி இந்த வெப்பநிலை அங்கு நிலவியது.

 உலகில் அதிகமான மழைப்பொழிவு என்றால், பிரான்சின் ரீயூனியன் தீவில் ஒரே நாளில் 182.5 சென்டிமீட்டர் மழை பெய்ததுதான். 1966-ல், ஜனவரி 8-ம் தேதி, டெனிஸ் எனும் புயல் ஏற்பட்டபோது இந்த கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது.

 உலகில் அதிகமான மழைப்பொழிவு ஏற்படும் இடம் என்றால், இந்தியாவின் சிரபூஞ்சிதான். இங்கு ஆண்டுக்கு 25.4 மீட்டர் மழைப் பொழிவு பெய்தது சாதனையாக பதிவாகி இருக்கிறது.

 உலகின் மிகப்பெரிய பனிப்பொழிவு அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே உள்ள மவுண்ட் ரெயினியர் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 1971-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதிக்கும் 1972-ம் ஆண்டு 18-ந் தேதிக்கும் இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் 31.1 மீட்டர் பனிப்பொழிவு இங்கு நிகழ்ந்துள்ளது.

 உலகின் மிக வேகமான காற்று வீச்சு 1999-ம் ஆண்டு மே 3-ந் தேதி பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் ஒக்லகாமா நகருக்கு அருகே மணிக்கு 482 கி.மீ. வேகத்தில் இந்த பெரும் காற்று வீசியது.

 மேகங்கள் 3 வகைப்படும். அவை சிமுலஸ், ஸ்டிராடஸ், சிர்சஸ் என்பதாகும்.

 பூமியில் ஆண்டுதோறும் பல லட்சம் மின்னல்கள் தாக்குகின்றது. அளவிடமுடியாத மின்சாரத்தை மின்னல்கள் பூமியில் பாய்ச்சுகின்றன. மின்னல்கள் 30 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு வெப்பமும், 60 ஆயிரம் மைல் வேகமும் கொண்டது.

 டோர்னாடோ எனும் காற்றுப் புழுதிச் சுழல்கள் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவை அதிகமாக தாக்குகிறது. ஆண்டிற்கு 1200 டோர்னாடோக்கள் அமெரிக்காவில் ஏற்படுகிறது. தனித்தன்மை வாய்ந்த புவி அமைப்பு கொண்ட அமெரிக்க நகரத்தில் இந்த காற்றுப் புழுதிச் சுழல்கள் ஏற்படுவதால் அந்தப் பகுதியே ‘டோர்னாடோ அல்லேய்’ என அழைக்கப்படுகிறது.

 புயல்கள் அதிவேக காற்றையும், மழையையும் தருகிறது. மக்கள் வசிக்கும் பகுதியில் புயல்கள் பெரும் சேதத்தை விளைவிக்கிறது. 1970-ல் ஏற்பட்ட போலா புயல், சீனாவில் 1975-ல் ஏற்பட்ட நினா புயல், 2005-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட கத்ரினா புயல் போன்றவை அதிக சேதம் ஏற்படுத்திய சில புயல்களாகும்.

 மனித குல வரலலாற்றில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர் சுனாமிதான். கடந்த 2004-ம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உருவான சுனாமி 11 நாடுகளில் மனித உயிர்களை காவு கொண்டது. மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்தனர்.

 பஞ்சமும் உலக நாடுகளில் கொத்துக்கொத்தாக உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. இந்தியா, சீனா பகுதிகளில் பலமுறை கொடுமையான பஞ்சங்கள் நிலவி கோடிக்கணக்கானவர்களை கொன்றிருக்கிறது. 1769-73-ம் ஆண்டில் இந்தியா, வங்காள தேசத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பூண்டோடு அழிந்தனர். அப்போது 1 கோடி பேருக்கும் மேல் இறந்ததாக தெரிகிறது. இதுபோல 10 ஆண்டு இடைவெளியில் இந்தியாவில் மீண்டும் பஞ்சம் ஏற்பட்டு 1 கோடியே 10 லட்சம் பேர் மாண்டனர். சீனாவில் 1810 ஏற்பட்ட பஞ்சம் மற்றும் 1846-49-ல் ஏற்பட்ட பஞ்சத்தால் சுமார் 4.5 கோடி மக்கள் இறந்தனர். இந்தியாவில் 1896-1902-ல் மீண்டும் பஞ்சம் ஏற்பட்டு 60 லட்சம் பேர் இறந்தனர். சீனாவில் 1907-1911-ல் ஏற்பட்ட பஞ்சத்தில் 2.5 கோடி பேர் இறந்துள்ளனர். 

Next Story