‘அமேசான்’ ஸ்பீக்கரால் ஏற்பட்ட அதிர்ச்சி!
அமெரிக்காவில் ஒரு வீட்டில் பேசிக்கொண்டிருந்த உரையாடல், வெகு தொலைவில் உள்ள மற்றொரு வீட்டுக்கு அமேசான் ஸ்பீக்கர் மூலம் அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
போர்ட்லாண்டில் வசிக்கும் ஒரு பெண் தனது கணவருடன் பேசிக்கொண்டிருந்த உரையாடல்கள் சியாட்டிலில் உள்ள இன்னொருவருக்கு அமேசான் எக்கோ ஸ்பீக்கர் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.
போர்ட்லாண்டைச் சேர்ந்த டேனியெல்லா, தனது வீடு முழுவதும் குரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஸ்பீக்கர்களை பொருத்தியிருந்தார்.
திடீரென்று ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உடனடியாக உங்கள் அமேசான் எக்கோ கருவிகளின் இணைப்புகளைத் துண்டியுங்கள் என்று எச்சரிக்கும் தொனியில் கூறினார். பயந்துபோன டேனியெல்லாவும் உடனடியாக இணைப்புகளைத் துண்டித்தார்.
தொடர்ந்து பேசிய அந்த நபர், தான் சியாட்டிலில் இருப்பதாகவும், டேனியெல்லாவின் வீட்டில் அவர் அவரது கணவருடன் பேசிய உரையாடல் பதிவு செய்யப்பட்டு தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த நபர் டேனியெல்லாவின் கணவர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் ஊழியர்தான்.
அவர் கூறியதை டேனியெல்லா முதலில் நம்பாவிட்டாலும், குறிப்பிட்ட விஷயத்தைத்தானே நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று அவர் தெளிவாகக் கூற, அதிர்ந்து போனார் டேனியெல்லா.
இதுதொடர்பாக அமேசான் நிறுவனம், போர்ட்லாண்டில் உள்ள ஒரு வாடிக்கையாளரின் வீட்டில் இதுபோல நடந்தது உண்மைதான் என்றும், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் வெளியானதும் பல அமேசான் எக்கோ பயனாளர்கள் தங்கள் ஸ்பீக்கர்களை அகற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் தனது ஸ்பீக்கர்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதாக டுவீட்டரில் தெரிவித்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் அந்த ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ள டேனியெல்லா, அமேசான் நிறுவனத்திடம் தனது ஸ்பீக்கர்களுக்கான தொகையை திருப்பிக்கொடுக்குமாறு கேட்டிருக்கிறாராம்.
குரலால் கட்டுப்படுத்தப்படும் அமேசான் ஸ்பீக்கர்கள் ஒரு புதுமையாகக் கருதப்பட்டன. ஆனால் வசதி அதிகரிக்கும்போது, கூடவே தொந்தரவும் வந்துவிடுகிறது!
Related Tags :
Next Story