மகனை வெளியேற்ற நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்!
அமெரிக்காவில் மகனை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்காக பெற்றோர் கோர்ட்டு படியேறிய சம்பவம் நடந்திருக்கிறது.
மகன் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக கோர்ட்டை நாடிய பெற்றோரை பார்த்திருப்போம், ஆனால் அமெரிக்காவில் மகனை வெளியேற்றுவதற்காக பெற்றோர் கோர்ட்டு படியேறிய சம்பவம் நடந் திருக்கிறது.
அந்த நியூயார்க் தம்பதி, 30 வயதாகும் தங்கள் வேலையில்லாத மகனை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
கிறிஸ்டினா- மார்க் ரோடோண்டோ என்ற அத்தம்பதி, தங்கள் மகன் மைக்கேலை வீட்டை விட்டு வெளியேறும்படி பலமுறை கூறியும் வெளியேறவில்லை என்று வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதில் வெல்ல மைக்கேல் மேற்கொண்ட சட்ட ஆராய்ச்சிகளை நீதிபதி டொனால்டு கிரீன்வுட் பாராட்டினாலும், அவர் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டார்.
வக்கீல் யாரையும் நியமனம் செய்துகொள்ளாமல் தாமாக வாதாடிய மைக்கேல், தனது பெற்றோரின் வீட்டில் மேலும் 6 மாதங்கள் வசிக்க அனுமதி கோரினார். ஆனால் அதை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
‘‘நான் வீட்டைவிட்டு வெளியேற இன்னும் கொஞ்சகாலம் அவகாசம் அளிக்க ஏன் மறுக்கின்றனர் என்று புரியவில்லை. அவர்களைச் சார்ந்து வாழும் ஒருவருக்கு ஆறு மாதங்கள் என்பது நியாயமான கால அவகாசம்தான்’’ என்கிறார், மைக்கேல்.
மகனுடன் பேசுவதை நிறுத்திவிட்ட பெற்றோர், அவர் வீட்டிலிருந்து வெளியேற ஆயிரத்து 100 டாலர் பணம் வழங்கியிருக்கிறார்கள். மேலும் அவருக்குச் சொந்தமான ஒரு கார் உள்ளிட்ட உடைமைகளையும் விற்குமாறு ஒரு குறிப்பு மூலம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் கொடுத்த பணத்தைச் செலவு செய்துவிட்ட மைக்கேல், தாம் அந்தப் பணத்தை அவர்களுக்கு திருப்பித் தர எண்ணியிருந்ததாகக் கூறுகிறார்.
வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும், மூன்று மாதங்களுக்குள் வீட்டை விட்டு வெளியேறி நியூயார்க்கில் உள்ள கமிலியஸ் பகுதியில் குடியேறப் போவதாகவும் மைக்கேல் கூறுகிறார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மைக்கேல் தான் பார்த்துவந்த வேலையை இழந்தபின், அவரைத் தங்களுடன் தங்கிக்கொள்ள அவரது பெற்றோர் அனுமதித்தனர். ஆனால் அவர் வேறு வேலை எதற்கும் செல்லாமல் தங்களுடனே தொடர்ந்து வசித்ததால் அவரது பெற்றோருக்கு வழக்குத் தொடரும் நிலை ஏற்பட்டது.
ஆனால் இப்போதும் மைக்கேல் தனது பெற்றோரின் வீட்டில்தான் வசித்துக்கொண்டிருக்கிறார்.
Related Tags :
Next Story