லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய தொடக்க கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை,
லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலாவிடம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியது.
2 பேர் கைதுநெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி ரேச்சல் ஜானட் (வயது 42). இவர் நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது பணி நியமனத்துக்கு பள்ளிக்கூட நிர்வாகம் அனுமதித்த போதும், கல்வித்துறை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்து ரேச்சல் ஜானட்டின் பணி நியமனம் தொடர்பாக அவருடைய அண்ணன் ஜான் வின்சென்ட் என்பவர் களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கல்வி அதிகாரிகள் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தால் பணி நிரந்தம் செய்வதாக கூறினார்கள்.
நேற்று முன்தினம் நெல்லை டவுன் பகுதியில் ஜான் வின்சென்ட் ரசாயன பவுடர் தடவிய பணத்தை இசக்கிமுத்து, கனகசபாபதி ஆகியோரிடம் கொடுத்த போது, அவர்கள் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் சோதனை செய்தனர். அங்கிருந்த ரூ.3 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதன்மை கல்வி அலுவலரிடம் மனுஇந்த நிலையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில், நிர்வாகிகள் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலாவை நேற்று காலையில் சந்தித்து மனு வழங்கினர்.
அந்த மனுவில், நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தபோது, ரூ.3 லட்சம் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர் ஆகியோர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வருகிறார்கள். லஞ்ச ஊழல் புகாரில் சிக்கி இருக்கும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.