டயர் வெடித்து டேங்கர் லாரி கவிழந்தது: பெட்ரோல், டீசல் சாலையில் ஆறாக ஓடியது தீயணைப்பு வீரர்கள் பெரும் தீ விபத்தை தவிர்த்தனர்


டயர் வெடித்து டேங்கர் லாரி கவிழந்தது: பெட்ரோல், டீசல் சாலையில்  ஆறாக ஓடியது தீயணைப்பு வீரர்கள் பெரும் தீ விபத்தை தவிர்த்தனர்
x
தினத்தந்தி 1 Jun 2018 3:00 AM IST (Updated: 31 May 2018 8:27 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே, ஓடிக் கொண்டிருந்த டேங்கர் லாரி டயர் வெடித்து சாலையில் கவிழந்து பெட்ரோல், டீசல் ஆறாக ஓடியது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே, ஓடிக் கொண்டிருந்த டேங்கர் லாரி டயர் வெடித்து சாலையில் கவிழந்து பெட்ரோல், டீசல் ஆறாக ஓடியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து பெரும் தீவிபத்தை தடுத்தனர்.

டேங்கர் லாரி 

மதுரையில் இருந்து பாளையங்கோட்டைக்கு நேற்று மாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள சீரகம்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் ரமேஷ்(வயது35) ஓட்டிச் சென்றார். கிளீனரான அதே மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த ராம் மகன் இளையராஜா(31) உடன் இருந்தார். அந்த லாரியில் 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 8 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் இருந்ததாக கூறப்படுகிறது.

சாலையில் கவிழ்ந்தது 

மாலை 4 மணியளவில் மதுரை–நெல்லை நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்த அந்த லாரி, கோவில்பட்டி அருகில் உள்ள சாலைபுதூர் பெத்தேல்கோம் பகுதியில் சென்றபோது, திடீரென பின்பக்க டயர் டமார் என வெடித்தது.

இதில் நிலை குலைந்த லாரி சாலையில் சிறிது தூரம் தாறுமாறாக ஓடி, சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் காயமின்றி தப்பினர்.

சாலையில் ஓடிய பெட்ரோல் 

இதனால், லாரியில் இருந்த பெட்ரோல், டீசல் ஆகியவை டேங்கரில் இருந்து சர்வீஸ் சாலையில் ஆறாக ஓடியது. இதை தொடர்ந்து சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெரும் தீவிபத்து அபாயம் நிலவியது. தகவல் அறிந்தவுடன் கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் கிரேனுடன் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.

கிரேன் உதவியுடன் ¾ மணிநேரம் போராடி அந்த டேங்கர் லாரியை நிமிர்த்தி நிறுத்தினர். பின்னர், லாரி மீதும், அந்த பகுதியில் ஆறாக ஓடிய பெட்ரோல், டீசல் மீதும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ விபத்தை தவிர்த்தனர்.

இதனால் மதுரை–நெல்லை நாற்கர சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story