அரசு அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
தேனியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அலுவலகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் பெருந்திட்ட வளாகம் அமைந்து உள்ளது. இங்கு முதன்மை கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், சுகாதாரத்துறை துணைப் பதிவாளர் அலுவலகம், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட சமூக தணிக்கை அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்து உள்ளன.
இந்த அலுவலகங்களில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஒவ்வொரு அலுவலகமாக சென்று அலுவலர்கள் வருகைப்பதிவேட்டை பார்வையிட்டு, வருகை புரிந்த அலுவலர்கள் அனைவரும் அலுவலகத்தில் உள்ளார் களா? என்பதை கேட்டறிந்தார்.
முதன்மை கல்வி அலுவலகத்தில் கழிப்பிடம் துர்நாற்றம் வீசியதால் அதை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அலுவலகங்களில் கோப்புகளை சீராக அடுக்கி வைக்க வேண்டும் என்றும், அலுவலகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆய்வு செய்ய வரும் போது, அலுவலகங்கள் சுத்தமாக இருக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரித்தார். இந்த திடீர் ஆய்வால் பெருந்திட்ட வளாக பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் பரபரப்பாக காணப்பட்டனர்.
Related Tags :
Next Story