திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்தது; 2 பேர் பலி


திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்தது; 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:30 AM IST (Updated: 1 Jun 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுக்க சென்றபோது அவர்களுக்கு இந்த பரிதாப முடிவு ஏற்பட்டது.

திண்டிவனம்

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 65). இவருடைய தம்பியான அதே கிராமத்தை சேர்ந்த பீர்முகமதுவின் மகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக சென்னையில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை வைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஆனைகுளத்தில் இருந்து ஒரு காரில் முகமதுஉசேன், அவரது தம்பி பீர்முகமது (57), இவருடைய மகன் அப்துல்ரகுமான் (27) ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டனர். காரை அப்துல்ரகுமான் ஓட்டிச்சென்றார்.

இவர்களது கார் நேற்று காலை 6.15 மணியளவில் திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பாதிரி கிராம பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் எதிர்திசையில் சென்று நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அப்துல்ரகுமான், முகமதுஉசேன் ஆகிய இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பீர்முகமது படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பீர்முகமதுவை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், விபத்தில் பலியான இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இரவு முழுவதும் கார் ஓட்டி வந்த களைப்பில் அப்துல்ரகுமான் சற்று கண் அயர்ந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தினால் திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story