மானாமதுரை அருகே மோதல் சம்பவம்: 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம்


மானாமதுரை அருகே மோதல் சம்பவம்: 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2018 4:00 AM IST (Updated: 1 Jun 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான நிலையில் இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் என்பவர் நேற்று இறந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தொடக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டதாக பழையனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ஜானகிராமன் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story