தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
மொடக்குறிச்சி அருகே கத்தி முனையில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளார்கள்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் தோப்பு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குட்டி என்கிற குமாரசாமி (வயது 86). இவர் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவராக உள்ளார். இவருடைய மனைவி சுசீலா (75). இவர்களுடைய மகன் ராஜா. இவர் திருமணமாகி குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சுசீலா வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். குமாரசாமி மாடியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது வீட்டின் பின்பக்கமாக ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து 7 பேர் கொண்ட கும்பல் இறங்கியது. பின்னர் அந்த கும்பல் குமாரசாமி வீட்டின் பின்பக்க கதவை படபடவென உடைத்து உள்ளே புகுந்தது.
கதவு உடைக்கும் சத்தம் கேட்டதும் சுசீலா பின்பக்கம் சென்றார். அப்போது மர்ம கும்பல் சுசீலாவை சுற்றி வளைத்தது. 3 பேர் சுசீலாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்து இருந்த தங்க தாலிக்கொடி மற்றும் காதில் அணிந்து இருந்த கம்மல் என 7¼ பவுன் நகையை பறித்தனர். இதற்கிடையே கும்பலில் மீதம் இருந்த 4 பேர் வீட்டின் மாடிக்கு சென்றனர். அங்கு அவர்கள் குமாரசாமியை கத்தி முனையில் மிரட்டி பீரோ சாவியை வாங்கினார்கள்.
பின்னர் பீரோவில் இருந்த ரூ.22 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். அதன்பிறகு கொள்ளை கும்பல் வீட்டின் பின்பக்கமாக நின்ற காரில் ஏறி தப்பிச்சென்றது.
கொள்ளையர்கள் சென்றதும் உடனே குமாரசாமி மொடக்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மோப்ப நாய் வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் வரை ஓடிச்சென்று நின்றது. மேலும் கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று அங்கிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கயல்விழி, ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் நேற்று சென்று குமாரசாமி மற்றும் சுசீலாவிடம் விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் அறச்சலூர், மொடக்குறிச்சி, சின்னியம்பாளையம், ஈரோடு என பல இடங்களில் கடந்த 11 நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் ஒரே மாதிரி முகமூடி கொள்ளையர்கள் காரில் வீடுகளின் பின்பக்கமாக செல்கிறார்கள். பின்னர் கதவை உடைத்து, உள்ளே புகுந்து சர்வ சாதாரணமாக நகை, பணத்தை கொள்ளையடித்து செல்கிறார்கள். ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து நாள்தோறும் கைவரிசை காட்டி வருகிறார்கள்.
சினிமாவில் வருவதுபோல் நாள்தோறும் இரவு நேரங்களில் கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்கும்போதே பீதியில் உள்ளார் கள். போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை கைது செய்தால் மட்டுமே பொதுமக்களின் அச்சத்தை போக்க முடியும்.
Related Tags :
Next Story