ஆசனூர் அருகே வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை
ஆசனூர் அருகே சாலையோர மூங்கில் மரத்தை முறித்து தின்ற ஒற்றை யானை, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை துரத்தியது.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அந்தப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வந்தது. அதனால் அப்பகுதி விவசாயிகள் அந்த யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானை வனப்பகுதிக்கு செல்லாமல் கிராமப்பகுதியிலேயே சுற்றித்திரிந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆசனூர் அரேபாளையம் பிரிவு அருகே அந்த ஒற்றை யானை வந்தது. இதைத்தொடர்ந்து அந்த யானை சாலையோரத்தில் நின்று கொண்டு அங்கிருந்த மூங்கில் மரத்தை முறித்து தின்று கொண்டிருந்தது. யானையை கண்டதும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்தினர். பின்னர் வாகனங்களில் வந்தவர்கள் அந்த ஒற்றை யானையை தாங்கள் கொண்டு வந்த கேமரா மற்றும் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் ஆவேசமடைந்த அந்த யானை வாகன ஓட்டிகளை துரத்தியது. அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.
Related Tags :
Next Story