எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சாத்தூர் தொகுதியில் முடங்கிக்கிடக்கும் பணிகள்


எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சாத்தூர் தொகுதியில் முடங்கிக்கிடக்கும் பணிகள்
x
தினத்தந்தி 1 Jun 2018 3:45 AM IST (Updated: 1 Jun 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத நிலையில் அடிப்படை தேவைகளை முறையிட முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது. திட்டங்களும் கிடப்பில் கிடக்கின்றன.

சாத்தூர்

சாத்தூர் தொகுதியில் இருந்து 1957, 1962 ஆகிய 2 முறை பெருந்தலைவர் காமராஜர் வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தியாகி எஸ்.ராமசாமி நாயுடு 1951, 1967-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். சாத்தூர் ராமச்சந்திரன் 1977, 1980, 1984, 1991, 2001, 2006 ஆகிய 6 முறை வெற்றி பெற்றார். 2011-ல் ஆர்.பி.உதயகுமார் வென்று தகவல் தொழில்நுட்பம், வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார்.

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் இந்த நகரில் பாதாள சாக்கடைத்திட்டம் கொண்டுவரப்பட்டது. மாநிலத்திலேயே பெரு நகரங்களுக்கு ஈடாக இந்த திட்டத்தை அங்கு செயல்படுத்தினார். முதல்-அமைச்சர், அமைச்சர்களை தந்த தொகுதி இதுவாகும்.

இப்படிப்பட்ட சூழலில் இப்போது மக்கள் பிரதிநிதி இல்லாத தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்பிரமணியன் கடந்த ஆண்டு தினகரன் அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார். இதனால் பல ஆண்டுகளாக அரசிடம் கோரப்பட்ட திட்டங்களும் சுப்பிரமணியனால் வலியுறுத்தப்பட்டு வந்த திட்டங்களும் அம்போவென கிடக்கின்றன.

குறிப்பாக ஆலங்குளம் சிமெண்டு ஆலைபுனரமைப்பு, சாத்தூரில் விரிவு படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், இருக்கன்குடி, வெம்பக்கோட்டை அணைகள் தூர்வாருதல், வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் கட்டுதல், சாத்தூர் பஸ் நிலைய விரிவாக்கம், இருக்கன்குடியில் இருந்து சாத்தூருக்கு புதிய குடிநீர் திட்டம் இவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டு விட்டன. இதற்காக சட்டமன்றத்தில் குரல்கொடுக்க ஆளில்லை. அமைச்சர், அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுக்கவும் முடியவில்லை.

சாத்தூரில் ரூ. 3 கோடியில் நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதில் பாதி தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டதால் பணி பாதியில் நின்று கிடக்கிறது. சாத்தூரில் குப்பையை தரம் பிரிக்கும் திட்டப்பணிகளும் அரைக்கிணறு தாண்டிய நிலையில் உள்ளது. சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று திருத்தங்கலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த திட்டம் தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை. 14 கோடி ரூபாய் செலவில் வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 6 மாதத்துக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

திட்டங்கள் மட்டுமின்றி அடிப்படை தேவைகளுக்காக பொதுமக்கள் முறையிட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழலில் சட்டமன்ற உறுப்பினரும் இல்லை.

Next Story