தொடர் விபத்துக்களை தடுக்க கருங்காலக்குடியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை


தொடர் விபத்துக்களை தடுக்க கருங்காலக்குடியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2018 4:15 AM IST (Updated: 1 Jun 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விபத்துக்களை தடுக்க கருங்காலக்குடியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

கொட்டாம்பட்டி,

மதுரை-திருச்சி நான்குவழிச்சாலையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. விரைவான போக்குவரத்துக்காக நான்குவழிச்சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் பல கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலையை கடக்கும் போது விபத்துக்களில் சிக்கி உயிர்ச்சேதம் மற்றும் உடல் உறுப்பு பாதிப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

இந்தநிலையில் கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள கருங்காலக்குடி பகுதியில் தொடர்விபத்து வாடிக்கையாகி வந்தது. நான்குவழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்த நாட்களில் இருந்து ஏராளமானவர்கள் விபத்தில் பலியாகி உள்ளனர். இதனால் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வது பெரும் சோதனையாக உள்ளது. இதனால் அந்தபகுதி மக்கள் நீண்ட நாட்களாக மேம்பாலம் அமைத்து தரக்கோரிக்கை வைத்து வருகின்றனர்

இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்வீஸ் சாலை கருங்காலக்குடியில் அமைக்கப்பட்டது. ஆனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சர்வீஸ் சாலையில் செல்லாமல், மெயின் ரோட்டில் சென்று நிறுத்துவதால் மேலும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அதைத்தொடர்ந்து நான்கு வழிச்சாலையில் எந்த வாகனங்களும் நிறுத்த கூடாது, கருங்காலக்குடியில் நிறுத்தும் அனைத்து பஸ்களும் சர்வீஸ் சாலையில் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர்.

மேலும் அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசாரால் வேகத்தடுப்பு அமைக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்கள் குறைந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கருங்காலக்குடியில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் அவர் பேசும் போது, மேலூர் கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது, விபத்துக்களை தடுக்க கருங்காலக்குடியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க முயற்சி எடுக்கப்படும். சாலை விதிகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் முறையாக பின்பற்றுதல் வேண்டும். அதன் மூலமாக இந்த பகுதியை விபத்தில்லா பகுதியாக மற்றமுடியும் என்றார். கூட்டத்தில் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் வசந்தி, மேலூர் போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம், மோட்டார் வாகன தனிக்கை ஆய்வாளர் விஜய், வியபாரிகள் சங்க தலைவர் கணபதி, வாகன ஓட்டுனர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story