தஞ்சையில் முத்து பல்லக்கில் விநாயகர், முருகன் வீதிஉலா


தஞ்சையில் முத்து பல்லக்கில் விநாயகர், முருகன் வீதிஉலா
x
தினத்தந்தி 1 Jun 2018 4:00 AM IST (Updated: 1 Jun 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் முத்து பல்லக்கில் விநாயகர், முருகன் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் முத்து பல்லக்கு விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்து பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்து பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது.

தஞ்சை சின்ன அரிசிகார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் 108-வது முத்து பல்லக்குவிழா நடந்தது. விழாவையொட்டி பாலதண்டாயுதபாணியும், விநாயகரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தனர்.

தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகரும், முருகப்பெருமானும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர். கீழவாசல் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் கல்யாண கணபதியும், தெற்குவீதியில் உள்ள கமலரத்ன விநாயகர் கோவிலில் இருந்து முத்துப்பல்லக்கில் கமலரத்ன விநாயகரும் எழுந்தருளினர்.

இதேபோல கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவில், மாமாசாகிப் மூலையில் உள்ள சித்தி விநாயகர் கோவில், கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து முத்து பல்லக்கில் விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த பல்லக்குகள் எல்லாம் தஞ்சை தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகியவற்றில் வலம் வந்தன. முத்து பல்லக்கு வீதிஉலா நேற்றுஇரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story