‘புற்று நோய் இல்லாத மாவட்டமாக திருச்சி உருவாக வேண்டும்’ கலெக்டர் பேச்சு


‘புற்று நோய் இல்லாத மாவட்டமாக திருச்சி உருவாக வேண்டும்’ கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 1 Jun 2018 4:15 AM IST (Updated: 1 Jun 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

புற்று நோய் இல்லாத மாவட்டமாக திருச்சி உருவாக வேண்டும் என்று உலக புகையிலை எதிர்ப்பு தின சைக்கிள் ஊர்வலத்தில் கலெக்டர் பேசினார்.

திருச்சி,

மே 31-ந் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புகையிலை எதிர்ப்பு தின சைக்கிள் ஊர்வலம் புறப்பட்டது. ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புகையிலை பொருட்களின் ஆபத்து பற்றி பொதுமக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் புற்று நோய் புகையிலையால் ஏற்படுகிறது என்பதால் இதுபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இப்படி ஒரு நாள் மட்டும் நடத்தினால் போதாது. தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அறக்கட்டளை அமைப்பினர், மருத்துவ துறையினர் தொடர்ந்து நடத்த வேண்டும். திருச்சி மாவட்டம் புற்று நோய் இல்லாத மாவட்டமாக உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சைக்கிள் ஊர்வலத்தில் திருச்சி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன், டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் மாணவ மாணவிகள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் சைக்கிளின் முன்பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறிய பதாகைகளை வைத்து இருந்தனர். ஊர்வலம் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, எம்.ஜி.ஆர். சிலை வழியாக அரசு மருத்துவமனையை அடைந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story