மந்திரிசபை விரிவாக்கம் பற்றி இன்று அறிவிப்பு முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி


மந்திரிசபை விரிவாக்கம் பற்றி இன்று அறிவிப்பு முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:07 AM IST (Updated: 1 Jun 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மந்திரிசபை விரிவாக்கம் பற்றி இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிப்பு வெளியாகும் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்-மந்திரி பதவி உள்பட மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகளை காங்கிரசும், 12 பதவிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்து கொண்டுள்ளன. குமாரசாமி முதல்-மந்திரியாக கடந்த 23-ந் தேதி பதவி ஏற்றார்.அவர் பதவி ஏற்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மந்திரிசபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. மந்திரி சபையில், காங்கிரஸ் கட்சி உள்துறை, நிதித்துறை, பொதுப்பணி துறை, மின்சார துறை ஆகிய இலாகாக்களை கேட்டு வந்தது. ஆனால், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் அதே துறைகளை கேட்டது. இதனால் இலாகாக்களை பங்கிடுவதில் இழுபறி ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் முன்னணி தலைவர்கள் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 5 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் வீட்டில் நடந்தது.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டீல், குலாம்நபிஆசாத், அசோக் கெலாட், வேணுகோபால், ஜனதா தளம்(எஸ்) பொதுச் செயலாளர் டேனிஷ்அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நிதித்துறை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு கிடைத்தது. போலீஸ் துறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதமாக கூறி வந்த நிலையில், பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேப் போல் பொதுப்பணி, பள்ளி-கல்வி, சமூகநலன் உள்ளிட்ட துறைகள் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும், மின்சாரம், தொழில்துறை, உயர்கல்வி, கலால் உள்ளிட்ட துறைகள் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு இரு கட்சிகளும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துறைகள் ஒதுக்கீட்டு விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்காவுக்கு சென்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதுபற்றி ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுச் செயலாளர் டேனிஷ்அலி டெல்லியில் நேற்று கூறுகையில், “நாங்கள் 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் நிதித்துறையை எங்கள் கட்சிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. மேலும் இதுபற்றி முதல்-மந்திரி குமாரசாமி, கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா உள்ளிட்ட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுப்போம்“ என்றார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது.

பொதுவாக கூட்டணி அரசு பதவி ஏற்கும்போது, மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் தாமதம் ஏற்படுவது இயல்பு. காரணம், மந்திரி ஆக வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை ஏற்படுகிறது. இது தவறு அல்ல. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் எங்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் துறைகள் ஒதுக்கீடு பற்றி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நாளை(அதாவது, இன்று) பெங்களூரு வருகிறார். அவர் எங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் மந்திரிசபை விரிவாக்கம், இலாகாக்கள் பங்கீடு, ஒருங்கிணைப்பு குழு அமைப்பது உள்பட அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நாளை (இன்று) அறிவிப்பு வெளியிடப்படும். மந்திரிசபையை அமைப்பதில் எந்த குழப்பமும் இல்லை.

எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்தும் சுமுகமாக சென்று கொண்டிருக்கின்றன. பல்வேறு துறை அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும், மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினேன். மாநில அரசு வேகமாக செயல்பட வேண்டும் என்பது எனது ஆசை. அதன் அடிப்படையில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story