தற்கொலை செய்ய தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட வயதான தம்பதி


தற்கொலை செய்ய தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட வயதான தம்பதி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:30 AM IST (Updated: 1 Jun 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்வதற்காக தூக்க மாத்திரைகளை வயதான தம்பதியர் சாப்பிட்டனர். இதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி சண்முகாபுரம் சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 79). இவரது மனைவி முத்துலட்சுமி (74). இவர்களது 2-வது மகன் இறந்துவிட்ட நிலையில் மருமகளுக்கு துணையாக இருவரும் அவரது வீட்டிலேயே தங்கினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தனர்.

இதனை பார்த்து அவரது மருமகள் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார். பாலசுப்ரமணியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலசுப்ரமணியனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவருக்கு அடிக்கடி இடுப்பில் வலி ஏற்பட்டு வந்தது. அவரது மனைவி முத்துலட்சுமி அவரை கவனித்து வந்துள்ளார். ஆனால் வயது முதிர்வு காரணமாக அவரால் தனது கணவரை சரியாக கவனிக்க முடியவில்லை. இதனால் தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

Next Story