மாணவர்கள் நன்றாக படித்து நாட்டிற்கு சிறந்த வழிகாட்டியாக வரவேண்டும் அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
மாணவர்கள் நன்றாக படித்து நாட்டிற்கு சிறந்த வழிகாட்டியாக வரவேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி
புதுவை லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நடந்தது. இதில் 88 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கணிதம், வேதியியல், விந்தை அறிவியல், சுற்றுச்சூழல், தாவரவியல், வானியல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வகுப்புகளும், பொம்மலாட்டம் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் கந்தசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு செல்லாமல் அறிவியல் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயிற்சி முகாமில் அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகமாக பங்கேற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு அதிக ஆர்வம் வந்துள்ளது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை வரவழைக்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வருவதில் சிரமங்கள் உள்ளது. எனவே, அடுத்தாண்டு ஒவ்வொரு தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் கோடை அறிவியல் முகாம் நடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளேன். இதன் மூலம் மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நம்மை விட்டு மறைந்தாலும் அவருடைய சிந்தனைகள், செயல்பாடுகள் நம்மைவிட்டு மறையவில்லை. ஒவ்வொரு மாணவனும் அப்துல் கலாமின் சிந்தனை, செயல்பாடுகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும். மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதாது. ஒழுக்கமாகவும், தவறான சிந்தனைகள் இல்லாமலும் இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து நாட்டிற்கு சிறந்த வழிகாட்டியாக வர வேண்டும். மேலும், ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில் ஆக்கப்பூர்வமான பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
இந்த முகாமில் மாணவர்கள் உருவாக்கிய பொம்மலாட்ட உருவங்கள், பறவை குடில்கள் மற்றும் கலைப் பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story