ஆர்ப்பாட்டத்தை முடியுங்கள் என்று கூறியதால் போலீசாருடன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்குவாதம்


ஆர்ப்பாட்டத்தை முடியுங்கள் என்று கூறியதால் போலீசாருடன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 1 Jun 2018 4:45 AM IST (Updated: 1 Jun 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

ஆர்ப்பாட்டத்தை முடிக்குமாறு கூறியதால் போலீசாருடன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள புதுக்குப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் மோசடி நடந்து இருப்பதாக கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பேச வந்தார். அப்போது அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பாட்டு ஒலித்துக்கொண்டு இருந்தது. அதன் சத்தத்தை குறைக்கும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். அங்கு பாதுகாப்பு பணிக்காக இருந்த திருக்கனூர் போலீசார் அறிவுறுத்தலின் பேரில் பாட்டு சத்தம் குறைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பேசினார். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி நேரம் முடிந்துவிட்டது. சாமி ஊர்வலம் வரவேண்டி உள்ளதால் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கூறினார்.

இதற்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பேசி முடித்ததும் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story