அடுத்து வரும் தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டி உத்தவ் தாக்கரே பேட்டி


அடுத்து வரும் தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டி உத்தவ் தாக்கரே பேட்டி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:34 AM IST (Updated: 1 Jun 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதில் பா.ஜனதா வேட்பாளர் ராஜேந்திர காவித், சிவசேனா வேட்பாளர் சீனிவாஸ் வாங்காவை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.

மும்பை,

இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சிவசேனா பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறுகையில், ‘அடுத்து வரும் தேர்தல்களில் சிவசேனாவுக்கு எந்தவொரு கூட்டணியும் கிடையாது. தனித்து போட்டியிடுவோம்’ என தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைவிட தற்போது குறைவான வாக்குகளையே பா.ஜனதா பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் உ.பி. உள்பட நாட்டின் பல இடங்களில் மக்கள் பா.ஜனதாவை புறக்கணித்து இருப்பதாக கூறினார். மேலும் பால்கர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

பால்கர் தேர்தலில் சிவசேனாவின் தோல்வியை நம்பமுடியவில்லை என கூறிய அவர், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

இந்தநிலையில் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்த போதிலும் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து உத்தவ் தாக்கரே எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story