மந்திரி பாண்டுரங் புந்த்கர் திடீர் மரணம் ஆஸ்பத்திரியில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது


மந்திரி பாண்டுரங் புந்த்கர் திடீர் மரணம் ஆஸ்பத்திரியில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது
x
தினத்தந்தி 1 Jun 2018 4:39 AM IST (Updated: 1 Jun 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய வேளாண்துறை மந்திரி பாண்டுரங் புந்த்கருக்கு நேற்றுமுன்தினம் மாலை திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சயானில் உள்ள கே.ஜே.சோமையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின் அவர் ஓரளவு சரியானார்.

மும்பை,

இந்தநிலையில், நள்ளிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பாண்டுரங் புந்த்கர் மரணம் அடைந்தார். அதிகாலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67.

மறைந்த பாண்டுரங் புந்த்கர் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஆவார். ஊழல் புகாரில் சிக்கிய ஏக்நாத் கட்சே கடந்த 2016-ம் ஆண்டு மந்திரி பதவியை இழக்க நேரிட்டபோது, அவர் வசம் இருந்த வேளாண்துறை மந்திரி பதவி பாண்டுரங் புந்த்கருக்கு வழங்கப்பட்டது.

1992-99 மற்றும் 2000-2003-ம் ஆண்டுகளில் 2 முறை மாநில பா.ஜனதா தலைவராக பதவி வகித்தார். 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் 3 முறை அகோலா தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். மாநில சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.

அவருக்கு சுனிதா என்ற மனைவியும், சாகர், ஆகாஷ் ஆகிய 2 மகன்களும், வசுந்தரா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மகன் ஆகாஷ், காம்காவ் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரி பாண்டுரங் புந்த்கரின் மறைவுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்டுரங் புந்த்கரின் சொந்த ஊரான காம்காவில் அவரது இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

Next Story