மழை காலங்களில் பாதிப்பு: மீட்பு பணிகளை மேற்கொள்ள 13 மண்டல குழுக்கள் அமைப்பு
மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 13 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ஊட்டி
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசியதாவது:-
ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட 233 இடங்கள் மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கு உள்வட்ட வாரியாக 13 மண்டல குழுக்கள் அமைக்கப் பட்டு உள்ளன. இதில் முன்எச்சரிக்கை தகவல் அளிக்கும் குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, நிவாரணம் மையம் மேலாண்மை குழு மற்றும் அரசு சாரா அமைப்புகளை சார்ந்த நபர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 465 பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறைகளை சார்ந்த அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மண்டல குழுக்கள் முதல் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பேரிடர் சமயங்களில் ஆற்ற வேண்டிய பணிகளின் முக்கியத்தும் குறித்து விளக்கி கூறப்பட்டு உள்ளது.
மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, நீலகிரி மாவட்ட அவசரகால மையத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அதேபோல் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. உதகை கோட்டத்துக்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்துக்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்துக்கு 04262-261295 உதகை தாலுகாவிற்கு 0423-2442433, குன்னூர் தாலுகாவிற்கு 0423-2206102, கோத்தகிரி தாலுகாவிற்கு 0426-6271718, குந்தா தாலுகாவிற்கு 0423-2508123, கூடலூர் தாலுகாவிற்கு 04262-261252, பந்தலூர் தாலுகாவிற்கு 04262-220734 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், நீலகிரி மாவட்ட வன அதிகாரி சுமேஷ்சோமன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story