இடைத்தேர்தல் முடிவு பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனாவை வீழ்த்தி பா.ஜனதா வெற்றி


இடைத்தேர்தல் முடிவு பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனாவை வீழ்த்தி பா.ஜனதா வெற்றி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:47 AM IST (Updated: 1 Jun 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனாவை வீழ்த்தி பா.ஜனதா வெற்றி பெற்றது. அதேநேரத்தில் பண்டாரா-கோண்டியா நாடாளுமன்ற தொகுதியை தேசியவாத காங்கிரசிடம் பா.ஜனதா பறி கொடுத்தது.

மும்பை,

பால்கர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான பா.ஜனதாவை சேர்ந்த சிந்தாமன் வாங்கா கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

பண்டாரா-கோண்டியா தொகுதி எம்.பி. நானா பட்டோலே பா.ஜனதா தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததோடு, அக்கட்சியில் இருந்தும் விலகினார். இதையடுத்து காலியான இரு தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

முன்னதாக சிந்தாமன் வாங்காவின் மகன் சீனிவாஸ் வாங்கா பா.ஜனதாவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். இதையடுத்து அவரை பால்கர் தொகுதியில் சிவசேனா வேட்பாளராக அறிவித்தது. இதனால் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா-சிவசேனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர காவித்தை பா.ஜனதா களம் இறக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி, தாமு சிங்டேயை வேட்பாளராக முன்னிறுத்தியது.

இதேபோல பண்டாரா-கோண்டியாவில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மதுக்கர் குகடே(காங்கிரஸ் ஆதரவு) வேட்புமனு தாக்கல் செய்தார். பா.ஜனதா கட்சி பண்டாரா-கோண்டியாவில் ஹேமந்த் பட்லேயை வேட்பாளராக களம் இறக்கியது. இந்த தொகுதியில் சிவசேனா போட்டியிடவில்லை. இதையடுத்து பால்கர் தொகுதியில் 7 பேரும், பண்டாரா-கோண்டியாவில் 18 பேரும் போட்டியிட்டனர்.

இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. குறிப்பாக பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் தங்களுக்குள் வார்த்தைகளால் கடுமையாக தாக்கிக் கொண்டன.

முதல்-மந்திரி பட்னாவிஸ் தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவரது ஆடியோ பேச்சை உத்தவ் தாக்கரே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி இரு எம்.பி. தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பண்டாரா-கோண்டியா தொகுதியில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. வாக்குப்பதிவு எந்திர கோளாறில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த தொகுதியில் 49 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் பால்கர், பண்டாரா-கோண்டியா இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பால்கர் தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே பா.ஜனதா வேட்பாளர் ராஜேந்திர காவித் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை நிறைவில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 780 வாக்குகள் பெற்று பால்கர் தொகுதியில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றது.

இதில் சிவசேனா 2 லட்சத்து 43 ஆயிரத்து 206 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், பகுஜன் விகாஸ் அகாதி 2 லட்சத்து 22 ஆயிரத்து 837 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4-வது இடத்துக்கும், காங்கிரஸ் கட்சி 5-வது இடத்துக்கும் தள்ளப்பட்டன.

இதையடுத்து பால்கர் தொகுதியில் தனது வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட இந்திய குடியரசு கட்சி உள்பட பல்வேறு அரசியல் அமைப்பினருக்கு ராஜேந்திர காவித் நன்றி தெரிவித்தார்.

வெற்றியை தவற விட்ட சிவசேனா வேட்பாளர் சீனிவாஸ் வாங்கா, ‘தேர்தலில் வெற்றி அடைவதோ, தோல்வி அடைவதோ முக்கியமல்ல. எனது தந்தை விட்டு சென்ற நற்செயல்களை தொடர்வதே முக்கியம். வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என தெரிவித்தார்.

இதேபோல பண்டாரா-கோண்டியா தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரசை சேர்ந்த மதுக்கர் குகடே பா.ஜனதா வேட்பாளரை 57 ஆயிரத்து 997 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

மதுக்கர் குகடே 4 லட்சத்து 34 ஆயிரத்து 389 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் ஹேமந்த் பட்லே 3 லட்சத்து 76 ஆயிரத்து 392 வாக்குகளும் பெற்று இருந்தனர். இதற்கிடையே பால்கர் தேர்தல் தோல்வி குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பால்கர் தேர்தல் குறித்து கருத்து கூறிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக், பால்கர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாமல் பகுஜன் விகாஸ் அகாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருக்க வேண்டும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது வேட்புமனுவை வாபஸ் பெற செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Next Story