வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி, செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்


வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி, செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 1 Jun 2018 5:34 AM IST (Updated: 1 Jun 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பந்தம். இவருடைய மகன் சுந்தர் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நகர இளைஞரணி துணை செயலாளராக உள்ளார். நேற்று மாலை 4 மணி அளவில் இவர் அண்ணாநகர் நவரத்தினதெருவில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தில் திடீரென ஏறினார்.

பின்னர் அவர் கோபுர உச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியுடன் நின்று, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்ற தலைவர் வேல்முருகனை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் அரசுக்கு எதிராக பேசியதாக மேலும் ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டார்.

இதை அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். இது பற்றி அவர்கள் கடலூர் புதுநகர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவில்லை. பின்னர் அவரிடம் போலீசார் ஒலிப்பெருக்கியில் பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் சுந்தர் அதை கேட்காமல் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷமிட்டார். மேலும் வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதற்கிடையில் தகவல் அறிந்ததும் சுந்தரின் பெற்றோர் மற்றும் அவரது மகள்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவரின் மகள்கள் தன்னுடைய தந்தையை கீழே இறங்கி வருமாறு அழுதபடியே கெஞ்சினர். மேலும் போலீசாரின் ஒலிப்பெருக்கியிலும் அவர்கள் பேசினர். காலதாமதமாக வந்த தீயணைப்பு துறையினரும் அவரை கீழே இறங்கி வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து கோபுரத்தில் இருந்து சுந்தர் கீழே இறங்கி வந்தார். பின்னர் அவரை போலீசார் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

45 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தால் அண்ணாநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story