அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுகிறது


அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுகிறது
x
தினத்தந்தி 2 Jun 2018 4:15 AM IST (Updated: 2 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுகிறது என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஜவஹர் கூறினார்.

பெரம்பலூர்

கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் குறித்த திறனூட்டல் பயிற்சி முகாம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் முதன்மை செயலாளரும், ஆணையருமான ஜவஹர் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். முகாமில் அரசு முதன்மை செயலாளர் ஜவஹர் பேசியதாவது:-

நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அரசு ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தக் கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்போது முடிவுற்றுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இந்த திட்டத்தை வருகிற ஆகஸ்டு மாதத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை உள்ள அரசு பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 8,374 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த, 4 நாட்கள் பயிற்சி சில பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக 2 நாட்கள் பயிற்சி கருவூல அலுவலர்களுக்கும் அளிக்க திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற 726 மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது 805 மருத்துமனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்2017-18-ம் நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.82 கோடி ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.318 கோடியும், மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 4 சார்நிலை கருவூல அலுவலகங்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசின் வரவினமாக இந்த நிதியாண்டில் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.106 கோடி அரசுக் கணக்கில் கருவூலங்கள் வழியாக சேர்க்கப்்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கருவூலத்துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மண்டல இணை இயக்குனர் செல்வசேகர், மாவட்ட கருவூல அலுவலர் ராதா மற்றும் அனைத்து துறைகளின் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story