ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு
ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு,
ஈரோடு வைராபாளையம் குப்பைக்கிடங்கு அருகே செல்லும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவுநீருடன் சாயக்கழிவுநீர் கலந்து ஓடுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் அதிகாரிகள் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள், ஓடையில் செல்லும் கழிவுநீரில் உப்புத்தன்மை உள்ளதா? சாயக்கழிவுநீர் கலக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன், பறக்கும்படை உதவி பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் ஈரோடு மாநகராட்சி சார்பிலும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் குழுவினர், ஓடையில் செல்லும் கழிவுநீர் எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பது குறித்தும், காவிரி ஆற்றில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் இடங்களில் கழிவுநீர் கலக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் கோபிநாத், தொழில்நுட்ப உதவியாளர்கள் ரவி, முருகலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் வந்த நீரை பரிசோதனை செய்ததில் சாயக்கழிவு நீர் கலக்கப்படவில்லை என தெரியவந்தது. மேலும் கழிவுநீரின் உப்புத்தன்மையும் குறைவாக உள்ளது.
சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்கள்.