மணல் குவாரி தொடங்க சாலை அமைப்பதை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்


மணல் குவாரி தொடங்க சாலை அமைப்பதை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2018 3:45 AM IST (Updated: 2 Jun 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி ஆற்றில் மணல் குவாரி தொடங்க சாலை அமைப்பதை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. அதாவது இந்த ஆற்றின் கரைகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆரணி ஆற்றில் தண்ணீர் தேங்குவதன் காரணமாக அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் நெல், கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளது. மணல் குவாரி தொடங்கினால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆரணி ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் அருகே உள்ள சிற்றபாக்கம், சுருட்டபள்ளி பகுதிகளில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் முழுவதுமாக வறண்டு விட்டன.

இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று ஊத்துக்கோட்டை பொது மக்கள் கடந்த மாதம் ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிசந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் மணல் குவாரி தொடங்க ஆயத்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்டித்து தி.மு.க.வினர் கடந்த மாதம் 17-ந் தேதி ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து மணல் குவாரி தொடங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று காலை லாரிகள் ஆற்றில் இருந்து மணல் எடுத்து செல்ல ஏதுவாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த தகவல் அறிந்த பொது மக்கள் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சியினர் நேற்று மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி அனைத்து கட்சினர் மற்றும் பொதுமக்கள் கண்டன குரல் எழுப்பினர். தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிசந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் அங்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். மணல் குவாரி தொடங்க கூடாது என்று நீங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். பொக்லைன் எந்திரம் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து மனித சங்கிலி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story