கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நாளை மறுநாள் தொடங்குகிறது


கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 Jun 2018 2:45 AM IST (Updated: 2 Jun 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஜமாபந்தி தொடங்கி 6–ந் தேதி வரை நடைபெறுகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகாவுக்குட்பட்ட கீழ்கோத்தகிரி, நெடுகுளா, கோத்தகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு மனு அளிக்கிறார்கள். இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி தாசில்தார் அலுவலகத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி 6–ந் தேதி வரை நடைபெறுகிறது.

கீழ்கோத்தகிரி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஜமாபந்தி நடக்கிறது. 5–ந் தேதி நெடுகுளாவிலும், 6–ந் தேதி கோத்தகிரியிலும் ஜமாபந்தி நடக்கிறது. இம்முகாமில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோத்தகிரி தாசில்தார் தனபாக்கியம் தெரிவித்து உள்ளார்.

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி துறை சார்பில் சுகாதார வளாகம் மற்றும் காத்திருப்போர் அறை கட்டப்பட்டது. ஆனால் சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி செய்யப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து ரூ.8 லட்சம் செலவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் கிணறு தோண்டப்பட்டது. ஆனால் கிணறு தோண்டும் போது பாறைகள் இருந்ததால் இந்த பணி கைவிடப்பட்டது. மேலும் கிணறு தோண்டியதில் இருந்து எடுக்கப்பட்ட மண், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்லும் நடைபாதையிலும், காத்திருப்போர் அறை அருகிலும் கொட்டப்பட்டது. இதனால் மண் குவியல் மலை போல் காட்சியளித்து வந்ததுடன் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நடப்பதற்கும் இடையூறாக இருந்து வந்தது.

இந்தநிலையில் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மண் குவியல், பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story