வாகனங்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகர பஸ்கள் இயக்கப்படுமா? கூடலூர் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
வாகனங்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கூடலூர் பகுதியில் நகர பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
தமிழகம் மற்றும் கேரளா– கர்நாடகா மாநிலங்கள் இணையும் எல்லையில் கூடலூர் அமைந்து உள்ளது. கூடலூர், பந்தலூர் என 2 தாலுகாக்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக விளங்குகிறது. இங்கு 2½ லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் தொகுதியின் தலைநகராக கூடலூர் உள்ளது. இந்த நிலையில் சமவெளி மற்றும் மலைப்பாங்கான பள்ளத்தாக்குகள் நிறைந்த கூடலூர் பகுதியில் போக்குவரத்து வசதி மிக குறைவாக உள்ளது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் இருந்து 48 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோவை, ஊட்டி, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் பெங்களூர், மைசூர் பகுதியில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு கர்நாடகா அரசு பஸ்களும், கோழிக்கோடு, பெருந்தல்மன்னா, சுல்தான்பத்தேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடலூருக்கு கேரள அரசு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதனால் 3 மாநில பயணிகள், பொதுமக்கள் வந்து செல்லும் மையமாக கூடலூர் திகழ்கிறது. இதுதவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் சொகுசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கூடலூரில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதற்கு பஸ் வசதி உள்ளது. ஆனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சரிவர பஸ் வசதி கிடையாது. இதனால் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்களையே கிராம மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கூடலூர் நகர பகுதியில் மட்டும் 2,500 ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இதனிடையே பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் தனியார் வாகனங்களின் கட்டணம் அதிகரிக்கும் நிலை உருவாகி வருகிறது. பெருகி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதியும் நகர பகுதியில் இல்லை. இதனால் வாகனங்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகர பஸ்கள் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகர பஸ்கள் அதிகளவு இயக்கினால் பொதுமக்களிடம் வரவேற்பு பெறும். மேலும் போக்குவரத்து கழகத்துக்கு போதிய வருமானமும் கிடைக்கும் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக– கேரள போக்குவரத்து துறையினர் இடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதில் கூடலூர்–வழிக்கடவு, கல்பட்டா மற்றும் கோழிக்கோடு– கூடலூர், ஊட்டி– திருவனந்தபுரம், மானந்தவாடி– கூடலூர் வழியாக கோவை, திருச்சூர், தொடுபுழா, பெங்களூரு பகுதிக்கு தமிழக–கேரள அரசு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கூடலூரில் நகர பஸ்கள் அதிகளவு இயக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக தொரப்பள்ளி– மேல்கூடலூர் அரசு ஆஸ்பத்திரி வரையும், கூடலூர்– பந்தலூர், தேவர்சோலை இடையே முதற்கட்டமாக பஸ்கள் இயக்க வேண்டும்.
பின்னர் பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடலூர்– செம்பாலா, ஆனைசெத்தக்கொல்லி, 1–வது மைல், கூடலூர் ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு வரும் வகையில் நகர பஸ்கள் இயக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:–
கூடலூர், பந்தலூர் பகுதிக்கு நகர பஸ்கள் இயக்க வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடப்பட்டு உள்ளது. 2004–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை தொடர்ந்து கோரிக்கை வைத்த போது கூடலூர், பந்தலூர் பகுதிகள் நகராட்சி என்ற அரசாணை நகலுடன் விண்ணப்பித்தால் நகர பஸ்கள் இயக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கான ஆணையை சமர்ப்பித்த போது 2 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஊட்டிக்கு 2 புதிய பஸ்கள் வந்தது. ஆனால் அந்த பஸ்கள் ஊட்டி– மஞ்சூர் என்ற புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இதனால் கூடலூரில் நகர பஸ்கள் இயக்கும் திட்டம் புறக்கணிக்கப்பட்டது.
கூடலூர்– பந்தலூர் வழித்தடத்தில் நகர பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கானல் நீராகவே உள்ளது. அவ்வாறு இயக்கினால் மக்களுக்கு பெருமளவு பயன் அளிக்க கூடியதாக அமையும். பந்தலூர், பொன்னானி, குந்தலாடி, பாட்டவயல் மற்றும் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி வழித்தடம், சேரம்பாடி, தாளூர் வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் பள்ளி– கல்லூரி மாணவ–மாணவிகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் முண்டியடித்து ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் நெருக்கடியிலும் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்து வருகின்றனர். இதனால் தினசரி பயணத்திற்காகவே கூடுதல் செலவு செய்யும் நிலை உள்ளது. கூடலூர் போக்குவரத்து கிளை மூலம் மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலவச பயண அனுமதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் குறைந்தபட்சம் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். கூடலூர்– பந்தலூர் வழித்தடத்தில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் ஆட்டோக்கள் அதிகளவு இயக்கப்படுகின்றது. எனவே நகர பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.