ரேலியா அணையில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா?
ரேலியா அணையில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குன்னூர்,
குன்னூர் நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு குடிநீர் வழங்க முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணை குன்னூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பந்துமி அருகே அடர்ந்த வனப்பகுதியில் கட்டப்பட்டு உள்ளது. ரேலியா அணை 1938–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப ரேலியா அணை 43.7 அடி கொண்டதாக கட்டப்பட்டது. ஆண்டுகள் செல்ல செல்ல குன்னூர் நகரின் மக்கள் தொகை பெருகியது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ரேலியா அணை மூலம் தண்ணீர் கொடுக்க இயலாமல் போனது. மேலும் பருவமழை தவறும் போது அணையின் நீர்மட்டம் குறைவடைந்தது.
குன்னூர் நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க நகராட்சி நிர்வாகம் மாற்று குடிநீர் ஆதாரங்களை மேற்கொண்டது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் பலத்த மழையின் போது ரேலியா அணை நிரம்பி வழிவது உண்டு. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த மழையினால் ரேலியா அணை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீர் அணையில் இருந்து வீணாக சென்றது. வீணாகும் இந்த தண்ணீரை சேமிக்க அணையை ஒட்டி தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சபாபதி கூறியதாவது:–
குன்னூர் நகராட்சியின் 30 வார்டுகளுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இது தவிர பந்துமி அணை, ஜிம்கானா நீர்தேக்கம், கரன்சி குடிநீர் திட்டம் ஆகியவை குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே மழை பெய்து வருகிறது. எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை நன்கு பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே குன்னூர் ரேலியா அணையில் தடுப்பணை கட்டினால் தண்ணீரை சேமிக்க முடிவதுடன், கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.