புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது - மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பேட்டி


புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது - மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2018 5:00 AM IST (Updated: 2 Jun 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு வாக்கு வங்கி அரசியல் நடத்தாமல் புதிய இந்தியாவை உருவாக்கும் உத்வேகத்தடன்செயல்பட்டு வருவதாக கோவையில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறினார்.

கோவை,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கோவை வந்தார். அவர் அவினாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 56 ஆயிரம் இணைய தள செய்தி சேனல்கள் உள்ளன. இணையதள செய்தி சேனல்களை உருவாக்க லைசென்சு தேவையில்லை. இது தொடர்பான கொள்கை உருவாக்கவேண்டுமென்றால் இணையதள செய்தி சேனல்கள் சேர்ந்து சங்கத்தை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட சங்கத்தினர் கோரிக்கைகளை வைத்தால் அவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. இது தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியின் கட்டுப்பாட்டில் வருவதால் இது தொடர்பாக அவரை அணுகலாம். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இந்த ஆண்டு முதல் நேரு யுவகேந்திரா விழாக்கள் நடத்தப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து ஏற்கனவே மத்திய பெட்ரோலிய மந்திரி பதில் அளித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு சதவீதத்தில் வாட் வரியை விதிக்கின்றன. அந்த வரியை குறைக்க மாநில அரசுகள் விரும்புவதில்லை. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர முடியவில்லை. தற்போது எரிபொருட்களின் விலை நிலையில்லாமல் உள்ளது. இருந்தபோதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்காக தொலைநோக்கு திட்டமாக மாற்று வழியை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

மத்திய அரசு சமையல் எரிவாயுவுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது. மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கான மானியத்தையும் மத்திய அரசு அளித்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து தான் அமைக்கப்படுகின்றன. அந்த வரி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மூலம் தான் கிடைக்கிறது. இந்தியாவில் 4 கோடி வரி செலுத்துவோர் அளிக்கும் வரிவருவாயை கொண்டு தான் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

கடந்த 2014–ம் ஆண்டு பா.ஜனதா அரசு அமைந்த போது அதற்கு முந்தைய அரசில் இருந்த அதிகாரிகளை கொண்டு தான் ஆட்சியை ஆரம்பித்தோம். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் அனைத்து துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவார். அப்போது பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஒவ்வொரு துறைக்கும் அவகாசம் அளிக்கப்படும். அந்த அவகாசம் முடிந்ததும் உங்கள் துறையின் வளர்ச்சி என்ன? நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று கேட்டு ஆய்வு நடத்துவார்.

இதன் மூலம் அனைத்து துறைகளின் வளர்ச்சியும் ஆய்வு செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தற்போது உள்ள இந்தியாவை புதிய இந்தியாவாக மாற்றும் பணியில் மத்திய அரசு புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஊழல், லஞ்சத்தை மத்திய அரசு ஒழித்துள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசு ஓட்டு வங்கிக்காக அரசியல் நடத்தவில்லை. மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே ஆட்சி நடத்தப்படுகிறது. எனவே இந்திய மக்கள் விரைவில் புதிய இந்தியாவை பார்ப்பார்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றிய பின்னரும் இடைத் தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்ததை கருத்தில் கொள்ளாமல் மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதையும் மேம்படுத்தும் வகையில் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள எந்த சம்பவம் பற்றியும் பத்திரிகையாளர்கள் தைரியமாக எழுதலாம். அதை மத்திய அரசு தடுக்காது. சமூகத்தை பாதிக்கும் எந்த பிரச்சினை குறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் சம்பவத்தில் பிரதமருக்காக மற்ற மந்திரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நான் இங்கு உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதே பிரதமரின் சார்பில் தான்.

கோவையில் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வர நானும் ஆர்வமாக உள்ளேன். அத்லெடிக் வீரர்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை கிராமப்புற அளவில் கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் இளம் விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2019–ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 மாவட்டங்களில் விளையாட்டு பள்ளிகளை தொடங்க உள்ளது. அங்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து கல்வி அளிக்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் 150 மாவட்டங்களில் விளையாட்டு பள்ளிகள் தொடங்கப்படும். இதன் மூலம் பள்ளிக்குழந்தைகள் விளையாட்டு மைதானங்களை தேடி அலைய வேண்டியதில்லை. ஆண்டுதோறும் தேசிய அளவில் ஆயிரம் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் செலவு செய்து அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கேற்ற வகையில் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story