ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி கிராமப்புற தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தபால் சேவை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
பொள்ளாச்சி,
கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி கிராமப்புற தபால் ஊழியர்கள் கடந்த மாதம் 14–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தையொட்டி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன் நேற்று கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் உடுமலை பகுதி பொறுப்பாளர் அங்கமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் பாரதிய மஸ்தூர் சங்க பொறுப்பாளர் பகவதி, கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க செயலாளர்கள் சுந்தரேசன், முருகேசன், கிணத்துக்கடவு பொறுப்பாளர் சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கிராம தபால் ஊழியர்கள் கூறியதாவது:–
கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு கடந்த 2015–ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமலேஷ் சந்திரா ஊதியக்குழு தனது பரிந்துரைகளை 2016–ம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்பித்தது. ஆனால் அஞ்சல் இலாகவும், அஞ்சல் துறை அமைச்சகமும் அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்காததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கமலேஷ் சந்திரா பரிந்துரையை அமல்படுத்தும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும். பொள்ளாச்சி கோட்ட பகுதியில் மட்டும் 200–க்கும் மேற்பட்ட கிராமப்புற தபால் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கிராமங்களில் தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பண பரிவர்த்தனை, சேமிப்பு திட்டங்களுக்கு பணம் செலுத்துவதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.