முன்பதிவின் போது காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் மாற்று ரெயில்களில் பயணிக்க விரும்பும் முறையை பயன்படுத்த வேண்டுகோள்


முன்பதிவின் போது காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் மாற்று ரெயில்களில் பயணிக்க விரும்பும் முறையை பயன்படுத்த வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:00 AM IST (Updated: 2 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்களில் முன்பதிவு செய்யும்போது காத்திருப்போர் பட்டியலில் பெயர் இருந்தால், அவர் மாற்று ரெயில்களில் பயணிக்க விரும்பும் நடைமுறையை பயன்படுத்துமாறு ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருச்சி

இந்தியன் ரெயில்வேத்துறை பயணிகளின் வசதிக்காக ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது காத்திருப்போர் பட்டியலில் வந்தால், அதே ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்த குறிப்பிட்ட ரெயிலை தவிர்த்து இடவசதி இருந்தால் அல்லது இடவசதி ஏற்பட்டால் மாற்று ரெயிலில் பயணம் செய்ய தேர்வு செய்யும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட முன்பதிவு செய்த ஊர்களுக்கு செல்ல வேண்டி அதே ரெயில் நிலையங்களுக்கு 12 மணி நேரத்துக்குள் அல்லது 24 மணி நேரத்துக்குள் அல்லது 48 மணி நேரத்துக்குள் வரும் ரெயில்களில் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை பெற டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதற்கான பகுதியில் குறிப்பிட வேண்டும். இந்த திட்டம் ‘விகால்ப் ’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையதள வசதியில் கடந்த 2015-ம் ஆண்டு வடக்கு ரெயில்வேக்குட்பட்ட டெல்லி-லக்னோ, டெல்லி-ஜம்மு இடையே அறிமுகப்படுத்தி இருந்த இந்த திட்டம், தற்போது முன்பதிவு மையங்கள் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் இந்த திட்டம் ரெயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு பொருந்தாது.

இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவின் போது காத்திருப்போர் பட்டியலில் பெயர் இருந்தால் மாற்று ரெயில்களில் பயணிக்க விரும்பும் முறை இருந்தும் பயணிகள் பெருமளவு பயன்படுத்தவில்லை. இதனால் இந்த வசதியை பயன்படுத்த பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Next Story