கடுமையான வார்த்தைகளுடன் மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு


கடுமையான வார்த்தைகளுடன் மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 2 Jun 2018 4:15 AM IST (Updated: 2 Jun 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடுமையான வார்த்தைகளுடன் மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய ராணுவ வீரர் மீது திருச்சி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காரியாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்த கஸ்தூரி(வயது32) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி சில ஆண்டுகள் அத்தம்பதியின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. பின்னர் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அடிக்கடி பிரச்சினை நீடித்தது. இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற கஸ்தூரி, கணவரை பிரிந்து பெற்றோர் ஊரான எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனி வந்தார். மேலும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ராணுவ வீரரான செந்தில்குமார், மனைவி கஸ்தூரிக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமாக கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அசாமில் உள்ள ராணுவ வீரர் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தேவைப்பட்டால் உரிய அனுமதிபெற்று செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story