சமூக வலைத்தளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய பெண் மீது வழக்குப்பதிவு


சமூக வலைத்தளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய பெண் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 2 Jun 2018 4:45 AM IST (Updated: 2 Jun 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழிசை சவுந்தரராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய மணப்பாறை பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மணப்பாறை

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பெண் ஒருவர் அவதூறாகவும் மிகவும் தரக்குறைவாகவும் பேசி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையறிந்த பா.ஜ.க.வினர் அந்த பெண் யார் என்று விசாரித்த போது மணப்பாறை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறி பா.ஜ.க. புறநகர் மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன், மணப்பாறை ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் சுப்ரமணி, மாவட்டப் பொருளாதாரபிரிவு துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்தீபக் உள்ளிட்டோர் நேற்று காலை மணப்பாறை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கென்னடியிடம் புகார் மனு கொடுத்தனர்.

அதில் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பேசிய பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி அவதூறாக பேசியதாக சூர்யாஆரோ என்ற இளம்பெண் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story