வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இணையதளம் மூலம் வாகன பதிவு


வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இணையதளம் மூலம் வாகன பதிவு
x
தினத்தந்தி 2 Jun 2018 3:45 AM IST (Updated: 2 Jun 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இணையதளம் மூலம் வாகனம் பதிவு செய்யும் முறையை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி,

புதுவை அரசு போக்குவரத்து துறையில் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மேம்படுத்தப்பட்ட வாகன்-4 என்ற மென்பொருள் மூலம் இணையதளம் வாயிலாக அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் முழுமையாக பெற போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடக்கமாக இணையதளம் மூலம் வாகனங்களை பதிவு செய்யும் முறை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காட்டேரிக்குப்பம், திருபுவனை, மாகி, ஏனாம் ஆகிய கிளை அலுவலங்களிலும், உழவர்கரை மற்றும் காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதுவை 100 அடி ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இணையதள வாகன பதிவு முறை தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் தலைமை தாங்கினார். விழாவில் கலந்து கொண்டு இந்த வாகன பதிவுமுறையை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இணையதளம் மூலம் வாகனங்களை பதிவு செய்வது புதுவையில் முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு நேரில் வராமல் வாகன பதிவுகளை மேற்கொள்ளலாம். முதல் கட்டமாக வாகன டீலர்கள் மட்டும் பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். தற்காலிக ‘பெர்மிட்’ எடுக்கவும் இதில் விண்ணப்பிக்கலாம். அடுத்த கட்டமாக துறையின் சேவைகள் அனைத்தையும் இணையதளம் மூலம் செயல்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story