கிணற்றில் இறங்கிய 3 தொழிலாளர்கள் பலி: நிவாரணம் கேட்டு உறவினர்கள் ‘திடீர்’ சாலை மறியல்


கிணற்றில் இறங்கிய 3 தொழிலாளர்கள் பலி: நிவாரணம் கேட்டு உறவினர்கள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:45 AM IST (Updated: 2 Jun 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே கிணற்றில் இறங்கிய 3 தொழிலாளர்கள் பலியானதால் நிவாரணம் கேட்டு உறவினர்கள் ‘திடீர்’ சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேட்டவலம்,

வேட்டவலம் அருகே கிணற்றில் வெடி மருந்துகளுடன் இறங்கியபோது திடீரென வெடித்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களது உறவினர்கள் நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேட்டவலத்தை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது நிலத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் கெங்கனந்தல் பகுதியை சேர்ந்த தொழிலாளிகளான சீத்தாராமன் (வயது 26), அதே ஊரை சேர்ந்த தங்கராஜ் (27), குமார் (37) ஆகிய 3 பேர் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மண் அள்ளும் கிரேன் மூலம் ஜெலட்டின் குச்சி மற்றும் வெடிமருந்துகளுடன் கிணற்றில் இறங்கிய போது திடீரென வெடித்து உள்ளது. இதில் 3 பேரும் கிணற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இறந்து போன சீத்தாராமன், குமார், தங்கராஜ் ஆகியோரின் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நாடழகானந்தல் காட்டுமலையனூர் கூட்ரோடு சந்திப்பில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தையா, வீரமணி, தனிப்பிரிவு தலைமை காவலர்கள் கோட்டி, நந்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை குறித்து போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள், முதல் - அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட போது தங்கராஜின் மனைவி காமாட்சி, சீத்தாராமனின் மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் மயங்கி கிழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story