ஓசூரில் வட மாநில வாலிபர் கொலையில் 3 பேர் கைது
ஓசூரில் வட மாநில வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவரை கொலை செய்யும் வீடியோவை எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குழந்தை கடத்த வந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியது. இதை நம்பி பல கிராமங்களில் வட மாநில இளைஞர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களால் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் சார்பில் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் வட மாநில இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓசூர் ஒன்னல்வாடி அருகில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக குடிசாதனப்பள்ளியை சேர்ந்த மூர்த்தி (வயது 19), மஞ்சு (19), கோவிந்தராஜ் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல குடிசாதனப்பள்ளியை சேர்ந்த பாபு, விஷ்ணு, கணேஷ், ஒன்னல்வாடியை சேர்ந்த நவீன் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே அந்த வட மாநில வாலிபரை சிலர் தாக்குவதும், அவர்களை சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதும் போன்ற வீடியோ நேற்று வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story